கௌரியம்பாள் வித்தியாலயம்: மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று தேவைகளைக் கேட்டறிய வேண்டும்!
திருக்கேதீஸ்வரம் கௌரியம்பாள் வித்தியாலயத்தின் அடிப்படைத் தேவைகளை நேரில் மதிப்பிட்டு உதவ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு மன்னார் நோக்கின் வேண்டுகோள்.
மன்னார், திருக்கேதீஸ்வரம் கௌரியம்பாள் வித்தியாலயத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்து கல்வி அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் நோக்கு கோருகிறது.
மன்னார் நோக்குக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, பாடசாலைக்குத் தேவையான ஆவணங்களைப் பிரதியெடுப்பதற்கான போட்டோகொப்பி இயந்திர வசதிகூட இல்லாத நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல அடிப்படைத் தேவைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தத் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, பாடசாலைக்கு நேரில் சென்று அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருடன் கலந்துரையாடுவது அவசியம்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று தேவைகளைக் கேட்டறிய வேண்டும். அவற்றைப் பட்டியலிட்டு, தத்தமது பொறுப்புகளுக்கும் வளங்களுக்கும் ஏற்ப தீர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
மாணவர்களின் திறமைகளும் சாதனைகளும் வெளிவருவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்தக் கவனயீர்ப்பின் நோக்கம்.